மு.வரதராசன் விளக்கம்
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிறருக்குத் தீங்கு விளைத்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் - துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கண் செய்வராயின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் - தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும். ('முற்பகல்', 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. தவம் அழிதலின், அங்ஙனம் கடிதினும் எளிதினும் வரும். அதனால், அவை செய்யற்க என்பதாம். இனி 'தானே வரும்' என்பது பாடமாயின் அச்செயல் தானே தமக்கு இன்னாதனவாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம் வருவித்து உரைக்க.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.