மு.வரதராசன் விளக்கம்
தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?
பரிமேலழகர் விளக்கம்
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்: மன் உயிர்க்கு இன்னா செயல்என் கொல் - நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான்? (இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப்பாவம் கழுவப்படாமையின்,'இன்னாதான் யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும் அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பது தோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?