மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
இன்னா எனத் தான் உணர்ந்தவை - இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும். (இன்பதுன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.