மு.வரதராசன் விளக்கம்
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.
பரிமேலழகர் விளக்கம்
அறிவினான் ஆகுவது உண்டோ - துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ, பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தனபோலக் குறிக்கொண்டு காவா இடத்து? (குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறிணைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், அது 'செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனால் சோர்வால்செய்தல்விலக்கப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?