அறத்துப்பால் · குறள் 268 / 1330
27. தவம்

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்.

The world worships one who has regained one’s soul.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

"தனது உயிர்"என்கிற பற்றும், "தான்"என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

தன் உயிர் தான் அறப்பெற்றானை - தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும். (தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.

— சாலமன் பாப்பையா