அறத்துப்பால் · குறள் 243 / 1330
25. அருளுடைமை

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.

The compassionate know not hell.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.).

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.

— சாலமன் பாப்பையா