மு.வரதராசன் விளக்கம்
தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும். புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.
பரிமேலழகர் விளக்கம்
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் - தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார், இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் - புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார். (வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின், இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலா யாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள்50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம்.
சாலமன் பாப்பையா விளக்கம்
தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.