மு.வரதராசன் விளக்கம்
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால்,இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
இசைஇலா யாக்கை பொறுத்த நிலம் - புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம் , வசை இலா வண்பயன் குன்றும் - பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும். ( உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் யாக்கை எனவும் அது நிலத்திற்குப் பொறையாகலின் 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது, பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.