குறள் 225:
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
'Mid devotees they're great who hunger's pangs sustain, Who hunger's pangs relieve a higher merit gain
அதிகாரம் - 23 - ஈகை
மு.வரதராசன் விளக்கம்
தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப் பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
பரிமேலழகர் விளக்கம்
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் - தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல், அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின். (தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்க மாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்று என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.