மு.வரதராசன் விளக்கம்
பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.
பரிமேலழகர் விளக்கம்
இரக்கப்படுதல் இன்னாது - இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று, இரந்தவர் இன்முகம் காணும் அளவு - ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்; (எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப் படுதல் - 'இரப்பார்க்கு ஈவல்' என்று இருத்தல். அதனை 'இன்னாது' என்றது. 'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை' (நாலடி.145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.