அறத்துப்பால் · குறள் 189 / 1330
19. புறங்கூறாமை

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.

How the earth bears the heavy burden of one who scandalises others! Perhaps patience is her virtue.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை ‘இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்! (எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.' இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!

— சாலமன் பாப்பையா