அறத்துப்பால் · குறள் 188 / 1330
19. புறங்கூறாமை

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு.

Those who trumpet the faults of their closest friends, what would they not do in the case of strangers?

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேசமாட்டார்கள்?

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? ('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது என்பது சொல்லெச்சம்'. 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!

— சாலமன் பாப்பையா