அறத்துப்பால் · குறள் 164 / 1330
17. அழுக்காறாமை

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக்கு அறிந்து.

The wise do not commit any wrong out of envy; for, they know the evils that spring from it.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறைமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து. (அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்

— சாலமன் பாப்பையா