அறத்துப்பால் · குறள் 156 / 1330
16. பொறையுடைமை

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.

The delight of the avenger is for a day. The joy of the forbearing lasts till the end of the earth.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம். [ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது]

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

— சாலமன் பாப்பையா