மு.வரதராசன் விளக்கம்
( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள்.பொறுத்துக்கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர். (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.