மு.வரதராசன் விளக்கம்
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஊடல்புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும். ('நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்', என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.