குறள் 1303:

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

'Tis heaping griefs on those whose hearts are grieved; To leave the grieving one without a fond embrace
அதிகாரம் - 131 - புலவி
மு.வரதராசன் விளக்கம்
தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது,ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்
பரிமேலழகர் விளக்கம்
(பரத்தையர் இடத்துநின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும். ('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.
சாலமன் பாப்பையா விளக்கம்
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.