காமத்துப்பால் · குறள் 1286 / 1330
129. புணர்ச்சிவிதும்பல்

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காணேன் தவறல் லவை.

When I see my husband I cannot see his faults. In his absence I cannot see anything else.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன். (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.

— சாலமன் பாப்பையா