குறள் 1273:
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.
As through the crystal beads is seen the thread on which they 're strung So in her beauty gleams some thought cannot find a tongue
அதிகாரம் - 128 - குறிப்பறிவுறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல் - கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு.(அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான்அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்', என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.