குறள் 1272:
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
The simple one whose beauty fills mine eye, whose shoulders curve Like bambu stem, hath all a woman's modest sweet reserve
அதிகாரம் - 128 - குறிப்பறிவுறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.
பரிமேலழகர் விளக்கம்
(நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு - என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது. (இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.