மு.வரதராசன் விளக்கம்
பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்
பரிமேலழகர் விளக்கம்
பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து. (பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார் அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்து காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.