காமத்துப்பால் · குறள் 1238 / 1330
124. உறுப்புநலனழிதல்

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்ததுபைந்தொடிப் பேதை நுதல்.

He soliloquising: “once when I gently loosened my hands from an ecstatic embrace, the forehead of my love suddenly turned pale. I wonder how she bears my separation in these long days.”

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டுவிட்டது.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(வினைமுடிதது மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ? ('இனிக்கடிதிற் செல்லவேண்டும்' என்பது கருத்து.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!

— சாலமன் பாப்பையா