மு.வரதராசன் விளக்கம்
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கு வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?
பரிமேலழகர் விளக்கம்
(அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து - இவள் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி; பாடு பெறுதியோ - ஒரு மேம்பாடு எய்தவல்லையோ? வல்லையாயின் அதனை ஒப்பதில்லை. ('கொடியார்க்கு' என்பது கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடு தோள்' என்பது அவை தாமே வாடாநின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்: ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும், அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது. 'நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; இவையெல்லாம் நீங்கும்; நீங்க எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி' என்னும் கருத்தால் 'பாடு பெறுதியோ'? என்றாள்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?