மு.வரதராசன் விளக்கம்
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.
பரிமேலழகர் விளக்கம்
(ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது.(குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.