குறள் 1210:
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
Set not; so may'st thou prosper, moon! that eyes may see My love who went away, but ever bides with me
அதிகாரம் - 121 - நினைந்தவர்புலம்பல்
மு.வரதராசன் விளக்கம்
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.
பரிமேலழகர் விளக்கம்
(வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது) மதி-மதியே; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப்படாதி - என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக.(கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன் கண்ணே சேர்தல். முதலோடு சினைக்கு ஒற்றுமை உண்மையின். 'சென்றாரைக் காண'என்றும் குறையுறுகின்றாளாகலின், 'வாழி' என்றும் கூறினாள். இனிப் 'படாது' என்பது பாடமாயின், கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிபடுகின்றதில்லை என அதனால் துயில் பெறாது வருந்துகினறாள் கூற்றாக்குக. இப்பொருட்கு 'வாழி'என்பது அசை நிலை)
சாலமன் பாப்பையா விளக்கம்
திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!