மு.வரதராசன் விளக்கம்
துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) காமமும் நாணும் - காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும்; நோனா என் உடம்பின் அகத்து - தம்மைப் பொறாத என்னுடம்பின் கண்ணே; உயிர் காவாத் தூங்கும் - உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும் தூங்காநின்றன. (பொறாமை மெலிவானாயது. தூங்கும் என்பது, ஒன்றினொன்று மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது தோன்ற நின்றது. 'தூது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய காம நாண்கள் தம்முள் ஒத்து உயிரினை இறுவியா நின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின், இஃது இற்றே விடும்' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.