மு.வரதராசன் விளக்கம்
இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.
பரிமேலழகர் விளக்கம்
('ஈண்டையார் அறியாமல் மறைத்தல் ஆண்டையார் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது). இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன்-இந்நோயை ஈண்டை அறியாமல் மறைத்தலும் வல்லேனாகின்றிலேன்; நோய் செய்தார்ககு உரைத்தலும் நாணுத் தரும் - ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு நாணினைத் தாரா நின்றது, இனி என் செய்கோ? (ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பது பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத் தரும்' என்றும் கூறினாள்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.