குறள் 1143:
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
The rumour spread within the town, is it not gain to me? It is as though that were obtained that may not be
அதிகாரம் - 115 - அலரறிவுறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு,இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) ஊர் அறிந்த கௌவை உறாஅதோ - எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ; அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான். (பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.