காமத்துப்பால் · குறள் 1142 / 1330
115. அலரறிவுறுத்தல்

மலரன்ன கண்ணாள் அருமை அறியாதுஅலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

Blind to the esteem of my lady of flower-like eyes, the village folk have linked her name with mine.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது. (அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.

— சாலமன் பாப்பையா