மு.வரதராசன் விளக்கம்
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
(செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது,) யாம் கண்ணின்காண அறிவில்லார் நகுப - யாம் கேட்குமாறுமன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு - அவர் அங்ஙனஞ்செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம் உறாமையான். ('கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகாநின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு ஏலாமை அறிக.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!