மு.வரதராசன் விளக்கம்
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.
பரிமேலழகர் விளக்கம்
('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; நாணினை நீக்கி நிறுத்து - அதனை விலக்குவதாய நாணினை அகற்றி. ('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி.)
சாலமன் பாப்பையா விளக்கம்
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.