மு.வரதராசன் விளக்கம்
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக,மடலூர்தலைத் தவிர, வலிமையான துணை வேறு எதுவுமில்லை.
பரிமேலழகர் விளக்கம்
(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.) காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை. (ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார் இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்', என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.