மு.வரதராசன் விளக்கம்
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்;பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது.
பரிமேலழகர் விளக்கம்
(இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று - யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி; மலர் காணின் மையாத்தி - தாமரை குவளை நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய், நின்அறிவு இருந்தவாறென்? (மையாத்தல்: ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல். இயற்கைப் புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப் பெறாமையின் அவற்றோடு ஒருபுடையொக்கும் மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கண் காதல் செய்து போந்தான், இது பொழுது அக்கண்களின் நலம் முழுதும் தானே தமியாளை இடத்தெதிர்ப்பட்டு அனுபவித்தானாகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு, ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்)