குறள் 1111:
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
O flower of the sensitive plant! than thee More tender's the maiden beloved by me
அதிகாரம் - 112 - நலம்புனைந்துரைத்தல்
மு.வரதராசன் விளக்கம்
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி.
பரிமேலழகர் விளக்கம்
(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) அனிச்சமே வாழி நன்னீரை - அனிச்சப்பூவே, வாழ்வாயாக, மென்மையால் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் - அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மெல்லிய இயற்கையை உடையவள். (அனிச்சம்: ஆகுபெயர், 'வாழி' என்பது உடன்பாட்டுக் குறிப்பு. இனி 'யானே மெல்லியள்' என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அது பொழுது உற்றறிந்தானாகலின், ஊற்றின் இனி்மையையே பாராட்டினான், 'இன்னீரள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!