மு.வரதராசன் விளக்கம்
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது, தானொருத்தி மட்டும் தாக்குவது போதா தென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.
பரிமேலழகர் விளக்கம்
(மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது.) நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக்கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற் போலும் தன்மையை உடைத்து.(மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல்என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.