மு.வரதராசன் விளக்கம்
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.
பரிமேலழகர் விளக்கம்
கனங்குழை - இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் - இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் - அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர்கொல் - அன்றி ஒருமானுட மாதரோ; என் நெஞ்சு மாலும் - இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. (ஓ - அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற் சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். 'கனங்குழை': ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம் ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, 'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.