மு.வரதராசன் விளக்கம்
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கையைக்கூட உதற மாட்டார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு: ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத் தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார். (வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்: நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.