மு.வரதராசன் விளக்கம்
கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில்,ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.
பரிமேலழகர் விளக்கம்
தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்ட மறைகளை இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர். (மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். பிறர், அம்மறைத்தற்குரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான், இது தொழில் உவமம். இதனான் அவரது செறிவின்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.