குறள் 1049:

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

Amid the flames sleep may men's eyelids close, In poverty the eye knows no repose
அதிகாரம் - 105 - நல்குரவு
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நெருப்புக்குள் படுத்துத் தூங்குவதுகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.
பரிமேலழகர் விளக்கம்
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. ('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.