பொருட்பால் · குறள் 1046 / 1330
105. நல்குரவு

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்.

The words of the poor, though born of experience and wisdom are not listened to.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும். (பொருளின்மையைத் தலைப்படுதலாவது 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும் என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

— சாலமன் பாப்பையா