மு.வரதராசன் விளக்கம்
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.
பரிமேலழகர் விளக்கம்
அலகு உடை நீழலவர் - உழுதல் தொழிலான் நெல்லினை உடையராய தண்ணளி உடையோர்; பலகுடை நீழலும் தம் குடைக்கீழ் காண்பர்-பலவேந்தர் குடை நிழலதாய மண்முழுதினையும் தம் வேந்தர் குடைக்கீழே காண்பர் (அலகு-கதிர், அ`ஃது ஈண்டு ஆகுபெயராய் நெல்மேலதாயிற்று. 'உடைய' என்பது குறைந்து நின்றது. நீழல் போறலின், நீழல் எனப்பட்டது. 'நீழலவர்' என்றது இரப்போர்க்கெல்லாம் ஈதல் நோக்கி ஒற்றுமை பற்றித் 'தங்குடை' என்றார். 'குடைநீழல்' என்பதூஉம் ஆகுபெயர்.'ஊன்று சால்மருங்கி்ன் ஈன்றதன் பயனே' (புறநா.35)என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம், 'இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்' (சிலப்.நாடுகாண்.149)என்றார் பிறரும்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.