பொருட்பால் · குறள் 997 / 1330
100. பண்புடைமை

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண்பு இல்லா தவர்.

Of what avail is one’s intelligence keen as the edge of the chist^? One is with the socks and gloves if one is not affable.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

அரம்போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

மக்கட்பண்பு இல்லாதவர் - நன்மக்கட்கே உரிய பண்பில்லாதவர்; அரம் போலும் கூர்மையரேனும் - அரத்தின் கூர்மை போலும் கூர்மையை உடையரேயாயினும்; மரம் போல்வர் - ஓர் அறிவிற்றாய மரத்தினை ஒப்பர். (அரம் - ஆகுபெயர். ஓர் அறிவு - ஊற்றினை யறிதல். உவமை இரண்டனுள் முன்னது, தான் மடிவின்றித் தன்னையுற்ற பொருள்களை மடிவித்தலாகிய தொழில் பற்றி வந்தது, ஏனையது, விசேட அறிவின்மையாகிய பண்பு பற்றி வந்தது. அவ்விசேட அறிவிற்குப் பயனாய மக்கட் பண்பு இன்மையின், அதுதானும் இல்லை என்பதாயிற்று.

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.

— சாலமன் பாப்பையா