மு.வரதராசன் விளக்கம்
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது - தன்னையிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆகலான், பிறர் பாடு அறிந்தொழுகுவார் மாட்டுப் பகைமை உள் வழியும் அஃது உளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன. ('பாடறிவார்' எனவே , அவ்வின்னாமையறிதலும் பெற்றாம். அதனை அறிந்தவர் பின் அது செய்யார்; இனியவே செய்வார் என்பது கருத்து. இதற்குப் பிறரெல்லாம் இரண்டு தொடரும் தம்முள் இயையாமல் உரைப்பாரும், 'இன்னாது' என்னும் சொற்குப் பிறவாது என்று உரைப்பாரு மாயினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.