அறத்துப்பால் · குறள் 98 / 1330
10. இனியவைகூறல்

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்.

Sweet and inoffensive words yield one happiness both here and hereafter.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

— சாலமன் பாப்பையா