பொருட்பால்பெருமை(அதிகாரம் 98)

ஒருமை மகளிரே போலப் பெருமையும்தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
Greatness springs from one’s own good conduct preserved like the sacred honour of a woman.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
ஒருமை மகளிரே போல - கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத்தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல; பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு - பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம். (பொருளின் தொழில், உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்ச உம்மை. ஒழுகுதல் - மனம் மொழி மெய்களை ஒடுக்கி, ஒப்புரவு முதலிய செய்து போதல். இதனால், அஃது உளதாமாறு கூறப்பட்டது.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.
— சாலமன் பாப்பையா
குறள் 974 / 1330
திருக்குறள் · thirukural.ai