மு.வரதராசன் விளக்கம்
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல். (ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. 'ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்' (நாலடி.செல்வம் நிலையாமை. 9) என்றார் பிறரும்,மேலும் 'செயற்கரிய செய்வார் பெரியர்'(குறள்.26)என்றாராயினும் ஈண்டு அவை அளவறிந்த ஒப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு 'உள்ளவெறுக்கை' என்றும், அது தன்னையே அதன் காரியமாகிய ஒளிஆக்கியும் கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.