மு.வரதராசன் விளக்கம்
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.
பரிமேலழகர் விளக்கம்
பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து - உயர்குடிப் பிறப்புத் தன்வலியாகிய மானம் அழியவந்துழி; ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறத்தலொழிந்து பயனில்லாத உடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ? ('மற்று' என்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி நின்றது. நற்குணங்கட்கு எல்லாம் இடனாதல் சிறப்புப்பற்றி, 'பெருந்தகைமை' என்றும், அவை எல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப்பற்றி, 'பீடு' என்றும், அஃது அழிந்தால் நின்ற வெற்றுடம்பு இழிக்கப்படுதலின், அதனை 'ஊன்' என்றும், பின்னால் இறத்தல் ஒருதலை என்பார் 'மருந்தோ' என்றும் கூறினார். மானத்தின் தொழில் அதற்கு இடனாகிய குடிப்பிறப்பின்மேல் நின்றது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?