குறள் 965:
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
If meanness, slight as 'abrus' grain, by men be wrought, Though like a hill their high estate, they sink to nought
அதிகாரம் - 97 - மானம்
மு.வரதராசன் விளக்கம்
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர். ('குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.