மு.வரதராசன் விளக்கம்
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டு மென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்.
பரிமேலழகர் விளக்கம்
சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார். (எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.