மு.வரதராசன் விளக்கம்
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.
பரிமேலழகர் விளக்கம்
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யாரக்கும் பணிவு வேண்டுக - குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக. (நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது. விதிப் பொருட்டாய் நின்றது. 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்' (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல,'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர்' எல்லாரும் அடங்க 'யாரக்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.